Sunday, April 22, 2012

ரமணரின் சில பதில்கள்
======================

கே: ஆத்ம தத்துவத்தைப் பற்றி புத்தி பூர்வமான நிச்சயம் அவசியமா?

ரமணர்: ஆம். சந்தேக விபரீதங்கள் தீர்ந்தாலொழிய தன்னிலையில் ஒருவன் எவ்வாறு நிற்க முடியும்? அதனாலேயே பரதத்வத்தை நன்கு கேட்டு சிந்தித்து சற்றும் சலனமற்று திட நிச்சயமுற வேண்டும். அதுவே பரோக்‌ஷ ஞானமெனப்படும். அதன்பிறகு இடைவிடா ஆன்மநாட்டத்தால், தேகான்மபாவம் அதுபற்றிய வாசனைகள் யாவும் நீங்கி, இயல்பாகவே தன்னிலை நிற்கலாம். அதுவே அபரோக்‌ஷானுபூதி எனப்படும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆன்ம நாட்டமுற்றோன் ஆத்மாவே குருவென்றுணர்வானாயின், மேற்கொண்டு எக்கேள்விக்கும் இடமில்லை. தன்னுள்ளேயே ஏகாக்ரமாய்த் தேடி தனதுண்மையை உணர் வேண்டும். அத்தகைய தீவிர நாட்டமுற்றோர் வெளியே ஒரு குருவின் சமீபத்தில் இருக்க வேண்டியதில்லை. அவ்வாறு உண்முகப் படாதவரே வெளியே நரவடிவில் இலகும் குருவின் துணையையும் நாடுவர்.

....
அமைதியை நாடி வருபவனை நோக்கி அதைச் செய், இதைச் செய்யென்று சொல்பவன் குருவாகான். விவகாரக் குழப்பத்தினின்று விடுதலையை நாடி வருபவனை மேலும் சில விவகாரங்களில் ஈடுபடுத்துபவன் எவ்வாறு வழி காட்டியாவான்? அத்தகைய உபதேசத்தால் சீடனது தளைகள் மேலும் சிக்கலாகும்

.....
குருவானவர் எதுவும் செய்வதில்லை. எந்தப் பொறுப்பும் ஏற்பதில்லை. வெறும் அஞ்ஞான சந்தேக விபரீதங்களை மாத்திரமே அகற்றியருள்கிறார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மஹாவாக்கியங்களின் வியாக்கியானங்கள் மனோமயமாம் விவாதங்களில் இழுத்துவிடுகின்றன. உன்முகப்பட விரும்புவோர் அனைத்தின் மூலமாம் நான் என்பதின் உண்மையையே அறிய முயல வேண்டும். அதனாலேயே வெளிமுக குழப்பங்கள் ஓய்ந்து உண்மையாம் அமைதி சிறந்திலகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி : சுகபோகங்களை துறக்க வேண்டுமெனில் அதை நன்றாக அனுபவித்துத் திருப்தியுற்றிருக்க வேண்டும் எனப்படுகிறதே?

ரமணர் : விஷயங்களை அனுபவித்து ஒழித்தல் என்பது தீயை மண்ணெணெய் கொண்டு அணைக்க முயற்சிப்பது போன்றதேயாம் ( சிரிப்பு) அனுபவிக்க அனுபவிக்க விஷய வாஸனை வலுத்து மேன்மேலும் நம்மை துன்புறுத்தும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கே: தூக்கத்தில் எதுவும் தெரிவதில்லை, சமாதியிலும் அவ்வாறே என்று சொல்லப்படுகிறது. அவ்வாறெனில் ஞான நிலை என்பது தான் எது?

ப : அறிவும் அறியாமையும் சற்றுமற்றதே ஞான நிலை. அது அயலேதுமற்ற நமது நிஜ சொரூபமே. இன்னதென கருதவும் கூடா அந்நிலை தானே தானாய் அனுபவத்திலேயே விளங்குவதாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி கேட்பவர் : ஆனந்தபாஷ்பம், மயிர்கூச்செறிதல், குரல் தழுதழுத்தல் முதலியவற்றிற்கும் சமாதிக்குமுள்ள சம்பந்தம் என்ன?

பகவான் ரமணர் : அவை அதிசூஷ்ம மனோ விருத்திகளே. துவைத பாவம் சிறிதேனுமின்றி அவை நிகழா. சமாதியோ ஒரே சாந்திமயம். ஆதலின் சமாதியில் அவைகளுக்கு இடமில்லை. ஆனால் சமாதியினின்று மனம் வெளிப்படுங்கால், ஆனந்த அனுபவத்தின் வெளிப்பாடுகளாய் அவை சிலகால் தோன்றக்கூடும். பக்தி மார்க்கத்தில் மனம் சமாதியில் ஆழுமுன் இந்த லக்‌ஷணங்கள் சிலகால் தோன்றக்கூடும்.

கே : ஞானமார்க்கத்தில் அவைகளுக்கிடமில்லையா?

ப : உண்டென்றோ இல்லை யென்றோ முடிவாய்க் கூறுவதற்கில்லை. அவரவர்களின் பூர்வ சாதனைகளையும் அமைப்பையும் பற்றி அவை நிகழலாம். நிகழாது ஒரே அமைதியாகவும் இருக்கலாம். மாணிக்கவாசகர் இடைவிடா உருக்கத்தையும் ஆனந்த லஹரியையும் பற்றி பாடுகிறார். அடக்க முடியாக் கண்ணீர் பெருக்கின் அனுபவம் எனக்கும் உண்டு.

.....................

கே : துக்கமின்மையே சுகமா? அல்லது சுகமென்பது தனித்ததோர் அனுபவமா?

ப : துக்கமின்மை மட்டுமல்ல வேறெதற்கும் இடமின்றியே ஸ்மிருத்தியானதோர் அனுபவமே அது. அதனாலேயே அது ஆனந்தமென நவிலப்பெறும்.

கே: தூக்கத்தின் ஆனந்தானுபவம் தெளிவின்மையால் நனி விளங்கவில்லையென்றும், சமாதியோ மறைப்பேதுமற்ற தெளிவாதலால் அங்கே ஆனந்தானுபவம் ஸ்பஸ்டமாய் விளங்குகிறதென்றும் சொல்லலாமா?

ப : ஆம். ஆம். அப்படியேதான்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, October 3, 2011


மீசையுள் ளாண்பிள்ளைச் சிங்கங்கள் என்கூட
வெளியினில் வாருங்கள் காணும்
நாசி நிரம்பவும் மயிர்தான் இரண்டுகால்
நடுவிலும் ஒருகூடை மயிர்தான்
ரோசங் கெடுவார்கள் என்கடை மயிர்தான் – குணங்
... குடிகொண்டாலும் என்னுயிர்க் குயிர்தான்.

--- குணங்குடி மஸ்தான் பாடல்
பெண்
=====

பெண்கள் முடிவெடுத்துவிட்டால் முடிவெடுத்ததுதான்
காதலில் விழுந்துவிட்டால் விழுந்துவிட்டதுதான்

யார் சொல்லியும் கேட்பதில்லை
அவளுக்கு சூழலும் புரிவதில்லை

அவளைப்போல் ஆணால் காதலிக்கவும் முடிந்ததில்லை.
கிடைத்தால் கூடையிலும் சுமந்து செல்வாள்
கிடைக்காவிட்டால் தென்முனையில் யுகமாக தவம்புரிவாள்
இழந்தால் முலைஅரிந்து மதுரையையும் எரிப்பாள்

பெண்கள் முடிவெடுத்துவிட்டால் முடிவெடுத்ததுதான்
வீழ நினைத்தால் யாரும்தயங்கும் படுபாதாளத்திலும் வீழ்வாள்.
See More

Wednesday, September 21, 2011


இறுதிக் குறிப்பு:

முடிவெடுத்துவிட்டேன்
அனைத்திற்க்கும் முற்றுப்புள்ளி 
முடிவெடுத்டுவிட்டேன்

இனி எவரும் நிராகரிக்க முடியாத 
இடத்திற்கு செல்வதென.

அர்த்தமற்று நிகழும் சம்பவங்களுக்கும் 
நில்லாது ஓடும் பைத்தியக்காரத்தனத்துக்கும்
அங்கீகாரம் தேடும் விளையாட்டுக்கும்

யார் மேலும் குற்றம் சொல்ல விரும்பவில்லை
எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும் தவறாக போனதால்
என் மேலும் குற்றம் சொல்ல நினைக்கவில்லை


சிறு நகை தோன்றுகிறது
என்னுள் இக்கணத்திலும்.

எங்கோ ஒரு மூலையில் 
கொடூர நகைப்புடன்
கலைத்து ஆடும் விதிக்கு 
இந்த முடிவு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. 

யாரிடம் சொல்லத் துடிக்கிறேன் இதையெல்லாம்
நானே இல்லையென்றானபின் எவர்தான் அது?

நானே எழுதிய கடிதத்தை 
கடைசியாக படித்துப் பார்க்கிறேன்
ஒரு பிழையும் இல்லை
முதல் முறை என் வாழ்வில்.

Sunday, September 4, 2011

மீள் வாசிப்பு
புது புத்தகத்தின் வாசனையை
பள்ளிக் குழந்தை முகர்வது போல் 
ஆரம்பத்தில் எனை முகர்ந்தாய் 
முகர்ந்தாய்.. முகர்ந்து கொண்டிருந்தாய் 
உன் குழந்தை மனம் கண்டு மகிழ்ந்தேன். 

 பின் நேரம் கிடைத்தால் 
 மெதுவாக எனை புரட்டி 
 வாசித்தாய் 
 என் உள்ளமும் உன் உள்ளமும் 
இணைந்து தாள்கள் படபடக்க 
 ஒரே உலகில் வாழ்ந்தோம். 

 பயணத்தின் போதும் 
உண்ணும் போதும் 
உறங்கும் போதும் 
என்னையே அணைத்துக் கிடந்தாய். 

 பின் சில நேரம் சலித்து எனை
 ஓரத்தில் மடித்து வைத்தாய்.. 
 உன் வாழ்வு சலிக்கும் நேரத்தில் மட்டும் 
பின் மீண்டும் தொடர்ந்தாய்.. முடித்தாய் 

 பரணில் யாரும் தொடாமல் 
இப்போது கரங்களின் 
ஸ்பரிசத்துக் காகவேணும் 
காத்துக் கிடக்கிறேன். 

அதோ இன்னொரு புத்தகம் 
புதிய வாசம் கண்டுகொண்டாய்
மாறிவிட்டாய் 
உலகில் புத்தகங்களுக்கா பஞ்சம் 
புத்தக வாசமே அறியாதவர்கள் 
சூழ்ந்த உலகில் நீ மேல்தான். 

 எனக்குத் தெரியும் 
என் ஆன்மா அறியும் 
நீ என்னை என்றேனும் 
 மீள்வாசிப்புக்கு தேடுவாய் என்று 
அப்போது நீ கண்டு கொள்வாய் 
வரிகளுக்கிடையில் கிடக்கும் 
 என் ஆன்மாவை.

Sunday, August 14, 2011



ஓஷோ சொன்ன ஜோக்

இளம் அறுவைசிகிச்சை மாணவர்களுக்கு பேராசிரியர் பாடம் எடுத்தார். “மாணவர்களே அறுவை சிகிச்சை நிபுணன் ஆவதற்கு அருவறுப்பு அடையாத மனநிலையும் மிகுந்த கவனம் தேவை. சரி உங்களுக்கு ஒரு சோதனை. நான் இப்போது செய்வதை கவனமாகவும் அருவருப்பு அடையாமலும் கவனித்து அதேபோல் செய்யவேண்டும்.”

டேபிளில் போர்த்தியிருந்த துணியை விலக்கினார். பாடம் செய்யப்பட்ட இறந்த உடல் நிர்வாணமாக இருந்தது. கையில் உறையை மாட்டிக்கொண்டு பிணத்தின் குதத்திற்குள் விரலைவிட்டு வெளியே எடுத்து அப்படியே தன் வாயில் வைத்து சப்பினார்.

மாணவர்கள் உறைந்தனர், அருவருப்பின் உச்சத்திற்கே சென்றார்கள்.

“மாணவர்களே நான் செய்ததைப் போன்றே யார் செய்ய முன்வருகிறீர்கள்?” பேராசிரியர் கேட்டார்.

ஒரு அவசரகுடுக்கை மாணவன் மட்டும் கையை தூக்கினான்.அவனும் கையில் புதிய உறையை மாட்டிக் கொண்டு அதேபோல் விரலை விட்டு எடுத்து வாயில் வைத்து சப்பினான்.

பேராசிரியர்.”வெல்டன். நான் உன்னை பாராட்டுகிறேன். உனது தைரியத்திற்காக. இருந்தாலும் உனக்கு கவனம் பத்தாது. உன்னால் நிபுணனாக முடியும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் நான் விட்டது ஒரு விரல் சப்பியது வேறொரு விரலை.

Search This Blog

Pages

Followers

About Me

My photo
Madurai, Tamilnadu, India
dpaprem@yahoo.com