Sunday, April 22, 2012

ரமணரின் சில பதில்கள்
======================

கே: ஆத்ம தத்துவத்தைப் பற்றி புத்தி பூர்வமான நிச்சயம் அவசியமா?

ரமணர்: ஆம். சந்தேக விபரீதங்கள் தீர்ந்தாலொழிய தன்னிலையில் ஒருவன் எவ்வாறு நிற்க முடியும்? அதனாலேயே பரதத்வத்தை நன்கு கேட்டு சிந்தித்து சற்றும் சலனமற்று திட நிச்சயமுற வேண்டும். அதுவே பரோக்‌ஷ ஞானமெனப்படும். அதன்பிறகு இடைவிடா ஆன்மநாட்டத்தால், தேகான்மபாவம் அதுபற்றிய வாசனைகள் யாவும் நீங்கி, இயல்பாகவே தன்னிலை நிற்கலாம். அதுவே அபரோக்‌ஷானுபூதி எனப்படும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆன்ம நாட்டமுற்றோன் ஆத்மாவே குருவென்றுணர்வானாயின், மேற்கொண்டு எக்கேள்விக்கும் இடமில்லை. தன்னுள்ளேயே ஏகாக்ரமாய்த் தேடி தனதுண்மையை உணர் வேண்டும். அத்தகைய தீவிர நாட்டமுற்றோர் வெளியே ஒரு குருவின் சமீபத்தில் இருக்க வேண்டியதில்லை. அவ்வாறு உண்முகப் படாதவரே வெளியே நரவடிவில் இலகும் குருவின் துணையையும் நாடுவர்.

....
அமைதியை நாடி வருபவனை நோக்கி அதைச் செய், இதைச் செய்யென்று சொல்பவன் குருவாகான். விவகாரக் குழப்பத்தினின்று விடுதலையை நாடி வருபவனை மேலும் சில விவகாரங்களில் ஈடுபடுத்துபவன் எவ்வாறு வழி காட்டியாவான்? அத்தகைய உபதேசத்தால் சீடனது தளைகள் மேலும் சிக்கலாகும்

.....
குருவானவர் எதுவும் செய்வதில்லை. எந்தப் பொறுப்பும் ஏற்பதில்லை. வெறும் அஞ்ஞான சந்தேக விபரீதங்களை மாத்திரமே அகற்றியருள்கிறார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மஹாவாக்கியங்களின் வியாக்கியானங்கள் மனோமயமாம் விவாதங்களில் இழுத்துவிடுகின்றன. உன்முகப்பட விரும்புவோர் அனைத்தின் மூலமாம் நான் என்பதின் உண்மையையே அறிய முயல வேண்டும். அதனாலேயே வெளிமுக குழப்பங்கள் ஓய்ந்து உண்மையாம் அமைதி சிறந்திலகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி : சுகபோகங்களை துறக்க வேண்டுமெனில் அதை நன்றாக அனுபவித்துத் திருப்தியுற்றிருக்க வேண்டும் எனப்படுகிறதே?

ரமணர் : விஷயங்களை அனுபவித்து ஒழித்தல் என்பது தீயை மண்ணெணெய் கொண்டு அணைக்க முயற்சிப்பது போன்றதேயாம் ( சிரிப்பு) அனுபவிக்க அனுபவிக்க விஷய வாஸனை வலுத்து மேன்மேலும் நம்மை துன்புறுத்தும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கே: தூக்கத்தில் எதுவும் தெரிவதில்லை, சமாதியிலும் அவ்வாறே என்று சொல்லப்படுகிறது. அவ்வாறெனில் ஞான நிலை என்பது தான் எது?

ப : அறிவும் அறியாமையும் சற்றுமற்றதே ஞான நிலை. அது அயலேதுமற்ற நமது நிஜ சொரூபமே. இன்னதென கருதவும் கூடா அந்நிலை தானே தானாய் அனுபவத்திலேயே விளங்குவதாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி கேட்பவர் : ஆனந்தபாஷ்பம், மயிர்கூச்செறிதல், குரல் தழுதழுத்தல் முதலியவற்றிற்கும் சமாதிக்குமுள்ள சம்பந்தம் என்ன?

பகவான் ரமணர் : அவை அதிசூஷ்ம மனோ விருத்திகளே. துவைத பாவம் சிறிதேனுமின்றி அவை நிகழா. சமாதியோ ஒரே சாந்திமயம். ஆதலின் சமாதியில் அவைகளுக்கு இடமில்லை. ஆனால் சமாதியினின்று மனம் வெளிப்படுங்கால், ஆனந்த அனுபவத்தின் வெளிப்பாடுகளாய் அவை சிலகால் தோன்றக்கூடும். பக்தி மார்க்கத்தில் மனம் சமாதியில் ஆழுமுன் இந்த லக்‌ஷணங்கள் சிலகால் தோன்றக்கூடும்.

கே : ஞானமார்க்கத்தில் அவைகளுக்கிடமில்லையா?

ப : உண்டென்றோ இல்லை யென்றோ முடிவாய்க் கூறுவதற்கில்லை. அவரவர்களின் பூர்வ சாதனைகளையும் அமைப்பையும் பற்றி அவை நிகழலாம். நிகழாது ஒரே அமைதியாகவும் இருக்கலாம். மாணிக்கவாசகர் இடைவிடா உருக்கத்தையும் ஆனந்த லஹரியையும் பற்றி பாடுகிறார். அடக்க முடியாக் கண்ணீர் பெருக்கின் அனுபவம் எனக்கும் உண்டு.

.....................

கே : துக்கமின்மையே சுகமா? அல்லது சுகமென்பது தனித்ததோர் அனுபவமா?

ப : துக்கமின்மை மட்டுமல்ல வேறெதற்கும் இடமின்றியே ஸ்மிருத்தியானதோர் அனுபவமே அது. அதனாலேயே அது ஆனந்தமென நவிலப்பெறும்.

கே: தூக்கத்தின் ஆனந்தானுபவம் தெளிவின்மையால் நனி விளங்கவில்லையென்றும், சமாதியோ மறைப்பேதுமற்ற தெளிவாதலால் அங்கே ஆனந்தானுபவம் ஸ்பஸ்டமாய் விளங்குகிறதென்றும் சொல்லலாமா?

ப : ஆம். ஆம். அப்படியேதான்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Search This Blog

Pages

Followers

About Me

My photo
Madurai, Tamilnadu, India
dpaprem@yahoo.com