Sunday, September 4, 2011

மீள் வாசிப்பு
புது புத்தகத்தின் வாசனையை
பள்ளிக் குழந்தை முகர்வது போல் 
ஆரம்பத்தில் எனை முகர்ந்தாய் 
முகர்ந்தாய்.. முகர்ந்து கொண்டிருந்தாய் 
உன் குழந்தை மனம் கண்டு மகிழ்ந்தேன். 

 பின் நேரம் கிடைத்தால் 
 மெதுவாக எனை புரட்டி 
 வாசித்தாய் 
 என் உள்ளமும் உன் உள்ளமும் 
இணைந்து தாள்கள் படபடக்க 
 ஒரே உலகில் வாழ்ந்தோம். 

 பயணத்தின் போதும் 
உண்ணும் போதும் 
உறங்கும் போதும் 
என்னையே அணைத்துக் கிடந்தாய். 

 பின் சில நேரம் சலித்து எனை
 ஓரத்தில் மடித்து வைத்தாய்.. 
 உன் வாழ்வு சலிக்கும் நேரத்தில் மட்டும் 
பின் மீண்டும் தொடர்ந்தாய்.. முடித்தாய் 

 பரணில் யாரும் தொடாமல் 
இப்போது கரங்களின் 
ஸ்பரிசத்துக் காகவேணும் 
காத்துக் கிடக்கிறேன். 

அதோ இன்னொரு புத்தகம் 
புதிய வாசம் கண்டுகொண்டாய்
மாறிவிட்டாய் 
உலகில் புத்தகங்களுக்கா பஞ்சம் 
புத்தக வாசமே அறியாதவர்கள் 
சூழ்ந்த உலகில் நீ மேல்தான். 

 எனக்குத் தெரியும் 
என் ஆன்மா அறியும் 
நீ என்னை என்றேனும் 
 மீள்வாசிப்புக்கு தேடுவாய் என்று 
அப்போது நீ கண்டு கொள்வாய் 
வரிகளுக்கிடையில் கிடக்கும் 
 என் ஆன்மாவை.

No comments:

Post a Comment

Search This Blog

Pages

Followers

About Me

My photo
Madurai, Tamilnadu, India
dpaprem@yahoo.com