Thursday, October 18, 2012

தியானம்






உடலும் மனமும் வேறு வேறு அல்ல. உடல் தூலமானது என்றால் மனம் சூட்சுமமானது. இரண்டும் நாணயத்தின் இருபக்கங்களே. ஒன்றை பார்க்க முடிந்தால் மற்றதை பார்க்க முடியாது. உடல் உண்மை என்றால் மனம் மாயை. உடல் பாதித்தால் மனம் பாதிக்கும். மனம் பாதிப்பில் இருந்தால் உடலும் பாதிப்புக்குள்ளாகும். உடலை சீர்படுத்தி மையத்தை அடைவதே யோகம். மனதை சீர்படுத்தி மையத்தை அடைவது தியானம். இருமுனைகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். உடல் முனையில் ஆரம்பித்து மையத்தை நெருங்கும்போது மனமும் நெருங்கியிருப்பதை உணர முடியும். ஒரு சிறிய மரக் கம்பை இரண்டு கை சுட்டு விரல்களின் மேல் வைத்து எதாவது ஒரு முனைவிரலை நகர்த்தும்போது மறு முனைவிரலும் தானாக நகர்ந்து, எப்படி ஒரே நேரத்தில் கம்பின் மையத்தை அடைகிறதோ அப்படி.

மந்திரம் உச்சரிப்பதில்- ஜெபிப்பதில் எனக்கு பூரண நம்பிக்கை இல்லை. அது ஆரம்பத்தில் நல்ல பலனை கொடுக்கலாம். கொடுக்கும். ஆனால் நிரந்தர வழியாக இதை கொள்ள முடியாது. உடனடி நிவாரணம் போல் இதை பயன் படுத்தலாம் அவ்வளவுதான். ஒரு கட்டத்திற்கு மேல் நாம் நம்மை அறியாமலேயே இதிலேயே சிக்கிக் கொள்ள வாய்ப்பு அதிகம். நம் மனம் அப்படி.

முதலில் மனம் என்பது என்ன? நம்மில் எழும் எண்ணக் கூட்டங்கள்தான். அதற்கென்று தனியாக ஒரு இருப்பு இல்லை. இடையறாது இயங்கிக் கொண்டே இருக்கும் இயந்திரம் அது. அதை நம்மால் என்றுமே அடக்க முடியாது. செய்யும் முயற்ச்சிகள் எல்லாம் அதனை மேலும் மேலும் வலுவானதாக்கும். தூசி நிரம்பி பறந்து கொண்டிருக்கும் அறையின் நடுவில் நாம் நிற்பது போல். அந்த பறக்கும் தூசியை நாம் அடக்குவதற்கு நிறுத்துவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் எல்லாம் அதை மேலும் அதிகமாகவே பரவச் செய்யும், பார்வையை மறைக்கும். முயற்சி ஏதும் செய்யாமல் நிற்பதே அதை படியச்செய்யும் பார்வை துலங்கும்.

மந்திரம் செபிப்பதும், சிறந்த இசையை ஒன்றி கேட்பதும் தற்காலிகமாக ஒரு ஓர்மையை கொடுக்கும். குழப்பமான மனதுடையவர்களுக்கு இது சிறந்த தற்காலிக நிவாரணம் வழங்கும் வழி. மந்திரம் சொல்வது ஒரு குறிப்பிட்ட எல்லைவரைதான் மனதை குவிக்கும். மனம் இல்லாமல் ஆவதில்லை. காகிதத்தில் பரப்பில் பரவி இருக்கும் இரும்புத் துகள்கள், காகிதத்தின் அடியில் ஒரு காந்தத்தை வைத்தவுடன் எப்படி எல்லாத் துகள்களும் ஓர் இடத்தில் குவிகிறதோ அப்படி. ஒரு தற்காலிக நிறுத்தம். அதை எடுத்தவுடன் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும்.


மனம் இல்லாத நிலை என்று ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா என்று கேள்வி எழலாம். ஏனென்றால் நாம் கற்பனைகூட செய்து பார்க்க முடியாதது அது. அதற்கு வாய்ப்பே இல்லை என்றுகூட நாம் சொல்லத் துணிவோம். ஆனால் நாம் அனைவரும் அதை சில நொடிகளேனும் சில நேரங்களில் அனுபவித்திருக்கிறோம். சூரிய உதயத்தை பார்க்கும்போது, சிறந்த இயற்க்கை நிலக் காட்சிகளில் இருக்கும் போது சட்டென்று ஒரு பிரமிப்பு, எந்த பிடிமானமும் இல்லாமல் சிந்தனையும் இல்லாமல் ஒரு நிலை. அதை தாங்கமுடியாமல் மீண்டுவந்து “என்ன ஒரு அற்புதமான காட்சி” என்ன அழகு என்றெல்லாம் வார்த்தைகளை கொட்டி அதை நாம் நம் எண்ணங்களால் மூடி விடுவோம். மனமற்ற நிலையில் அந்த நொடிகளில் திரை விலகி சட்டென்று ஒரு ஆழம் தெரிகிறது, திறக்கிறது. உடனே நாம் வெளியில் வந்து விடுகிறோம்.
-


மனதுடன் நாம் சம்பந்தப் படுத்திக் கொள்ளாமல் விலகி இருந்து “கவனிப்பதே” சிறந்த வழி. athuஅதையே நான் தியானமாக பார்க்கிறேன். செய்கிறேன்.
வரும் எண்ணங்களுக்கும் நமக்கும் ஏதும் சம்பந்தம் இல்லை என்றிருப்பது. ”சாட்சி பாவத்துடன்” இருப்பது. நாம் முன்னர் செய்த இழிவான செயல்கள், பெருமைக் குரிய செயல்கள், நல்ல எண்ணம்-தீய எண்ணம், கடந்த கால வாழ்க்கை, எதிர்கால திட்டமிடல் இவை அணைத்தும் நம் எண்ணங்கள் மட்டுமே. அது நாம் அல்ல. அதனால் எந்த ஒரு குற்ற உணர்வுக்கோ, பெருமை உணர்வுக்கோ ஆட்பட தேவையில்லை அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சொல்லப் போனால் குற்ற உணர்வும் பெருமை உணர்வும் தியானத்திற்கு பெரும் தடைகள். தொடர்ந்து தியானிப்பவர்களுக்கு இந்த உணர்வுகள் மிஞ்சி இருந்தால் அவர்கள் தவறாக தியானம் செய்கிறார்கள் என்று துணிந்து கூறலாம்.

நம் மனது எண்ணத்தை பற்றிக் கொண்டே சென்று கொண்டிருக்கும். அதிலே நாம் பயணிக்கிறோம். இடயறாது இது நடந்து கொண்டிருக்கிறது. எழும் அந்தந்த எண்ணங்களுடன் நாம் சம்பந்தப் படுத்திக் கொள்வதாலேயே நாம் உணர்ச்சிக்கு ஆளாகிறோம். இந்த எண்ணத்தைப் பற்றுதல் சாட்சி பாவத்தில் தளர்கிறது, அறுபடுகிறது.

இந்த சாட்சி பாவமே, “கவனமே” சிறந்த வழி என்று சொல்வதற்கு காரணம் இது நம்முடன் தொடர்ந்து இருப்பது. ஜபமும் (மந்திரமும்) இசையும் அது நடைபெறும் பொழுது மட்டுமே மனம் குவிகிறது அதிலிருந்து எழுந்து அன்றாட வாழ்வில் நுழையும்போது மீண்டும் எண்ணங்கள் தொட்டுத் தொடர்ந்து சங்கிலிபோல் பரவ ஆரம்பிக்கிறது. சாட்சிபாவம் எளிதில் பழக்கத்தால் தொடரக்கூடியது. எங்கும் எப்போதும் எவ்வேலை செய்து கொண்டிருந்தாலும் அதனை நாம் தொடர வைக்கலாம். இதனையே ”அஜபா” (ஜபம் அற்றது) என்கின்றனர்.

நாம் அனைவரும் உறக்கத்தில் மையத்திலேதான் ஒடுங்குகிறோம். ஆனால் கவனம் இருப்பதில்லை. கவனம் இல்லாததினால் நாம் அதை உணர்வதில்லை. உறக்கத்தில் மையத்தில் ஒடுங்குவது குறைந்த நேரம் மட்டுமே. மற்ற நேரங்களில் நாம் உறக்கத்தில் இருந்தாலும் நம் மனம் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். வேகமாக மிதிக்கப்பட்ட மிதிவண்டி நாம் மிதிப்பதை நிறுத்தியும் சற்று தூரம் அதாகவே சென்று நிற்பது போல் பகல் முழுவதும் இயங்கிய மனது
இரவிலும் அது இயங்குகிறது. அதுவே கனவுகளாகிறது. கனவில் லாஜிக் இருப்பதில்லை. இல்லாததற்கு காரணம் மனதை தொகுத்துப் பார்க்கும் புத்தி இல்லாததாலேயே. தொகுத்துப் பார்த்தல் அங்கு இல்லாத காரணத்தாலேயே கனவுகளில் லாஜிக் இருப்பதில்லை. கனவுகளற்ற தூக்கத்தையே நாம் “நன்றாக ஆழ்ந்து தூங்கினேன்””””“ என்று சொல்கிறோம். மனிதனுக்கு தூக்கம் மட்டும் இல்லை என்றால் பைத்தியம் பிடித்தே அலைவான். அந்த வகையில் இயற்க்கைக்கு நம் மீது பெரும் கருணைதான்.

No comments:

Post a Comment

Search This Blog

Pages

Followers

About Me

My photo
Madurai, Tamilnadu, India
dpaprem@yahoo.com